வேலூரில் ஜி.ஜி.ரவி தம்பிக்கு கத்தி வெட்டு; போலீஸ் துப்பாக்கி சூடு


வேலூரில் ஜி.ஜி.ரவி தம்பிக்கு கத்தி வெட்டு; போலீஸ் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 12 Dec 2017 4:41 AM IST (Updated: 12 Dec 2017 4:41 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தோட்டப்பாளையத்தில் ஜி.ஜி.ரவியின் தம்பி கத்தியால் வெட்டப்பட்டார். அதை தொடர்ந்து போலீஸ்காரர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் -சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி சாரதாம்பாள். இவர்களுக்கு ஜி.ஜி.ராஜூ, ஜி.ஜி.ரவி, ஜி.ஜி.ரமேஷ், ஜி.ஜி.செல்வம் என 4 மகன்கள். இளைய மகன் ஜி.ஜி.செல்வம் (வயது 47), தொழில் அதிபராக உள்ளார்.

இவர் வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமாக தங்கும் விடுதிகளும் உள்ளன.

இவருடைய அண்ணன்கள் ஜி.ஜி.ரமேசும், ஜி.ஜி.ரவியும் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தனது உயிருக்கும் மர்மநபர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என ஜி.ஜி.செல்வம் கருதினார்.

எனவே அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஜி.ஜி.செல்வத்துக்கு தோட்டப்பாளையம் டி.கே.வி.நகரில் சுமார் 3 ஆயிரம் சதுரஅடி காலிமனை உள்ளது. இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மாடுகளை கட்டி பராமரித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமையிலான அதிகாரிகள் தோட்டப்பாளையம் பகுதியில் டெங்கு ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜி.ஜி.செல்வத்துக்கு சொந்தமான காலிமனையில் குப்பைகள் கொட்டப்பட்டு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடாக இருந்ததாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து ஜி.ஜி.செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காலிமனையை பார்வையிட ஜி.ஜி.செல்வம் மாலை 4 மணியளவில் வந்தார். அந்த பகுதியை சேர்ந்த சிலரை அழைத்து காலிமனையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும்படி ஜி.ஜி.செல்வம் கூறினார். தொடர்ந்து அப்பணியை அவர் கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் திடீரென 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் காலிமனையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளை கைகளில் ஏந்தியபடி ஜி.ஜி.செல்வத்தை நோக்கி வேகமாக ஓடிவந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜி.ஜி.செல்வம் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

எனினும் மர்மநபர் ஒருவர் வேகமாக விரட்டி சென்று தான் கையில் வைத்திருந்த கத்தியால் ஜி.ஜி.செல்வத்தின் கழுத்தில் வெட்ட முயன்றார். அதனை அவர் இடது கையால் தடுத்தார். இதில் ஜி.ஜி.செல்வத்துக்கு கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அப்போது கத்தி தவறி கீழே விழுந்தது. அதனை மர்மநபர் எடுக்க முயன்றார்.

இந்த சம்பவத்தின்போது ஜி.ஜி.செல்வத்துக்கு துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்த போலீஸ்காரர் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தார். திடீரென இந்த சம்பவத்தை கண்ட அவர் மர்மநபர்கள் மீது 2 முறை துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குறி தவறியதால் குண்டு அவர்கள் மீது படவில்லை. போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதும் மர்மநபர்கள் வேகமாக தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த ஜி.ஜி.செல்வத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அறிவழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜி.ஜி.செல்வம் மற்றும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்த போலீஸ்காரரிடம் விசாரணை நடத்தினார்.

ஜி.ஜி.செல்வத்தை மர்மநபர்கள் வெட்டிக் கொல்ல முயன்றதையும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகம், மருத்துவமனையின் முன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியிலும், ஆற்காடு ரோட்டிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிவு செய்தார். இந்த கொலை முயற்சி சம்பவம் தொழில் போட்டி காரணமாக நடந்ததா? குடும்பப்பகையா? அல்லது முன்விரோதம் காரணமா? எனவும், மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்கள் 6 பேர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story