திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:50 AM IST (Updated: 12 Dec 2017 4:49 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி ஒன்றியம் கொசவன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதிய கொட்டாமேடு, லட்சுமிபதி நகர் போன்ற பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மின்சார வசதி, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெற்று காலம்காலமாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகள் திருநின்றவூர் பெரிய ஏரி அருகே அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இப்பகுதிக்கு வந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி இருப்பதாக கூறி வீடுகளை விரைவில் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட புதிய கொட்டாமேடு, லட்சுமிபதி நகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தங்கள் குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது வந்திருந்த பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story