உயிர்களின் பரிணாமமும், ஏலியன்களின் புத்திக்கூர்மையும்!
ஒரு செல் உயிரிகள் பல செல் உயிரிகளாக மாறிய இந்த திடீர் மாற்றம் ‘எப்படி ஏற்பட்டது?’ என்பது தான் பரிணாம உயிரியலில் தற்போதுள்ள பல மில்லியன் டாலர் கேள்விகளுள் ஒன்றாக இருந்து வருகிறது.
பூமி தோன்றிய பின்னர் சில காலத்துக்கு பூமியில் உயிர்களே இல்லை. அதன்பிறகு, பூமியில் இருந்த புரதங்கள் சரியான வகையில் ஒன்று கலக்கவே பூமியில் முதல் உயிர் தோன்றியது. அதற்குப்பிறகான கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு, உயிர்கள் சாதாரணமானவையாக மற்றும் சுவாரசியமற்றவையாகவுமே இருந்தன.
உதாரணமாக, பல நூற்றாண்டுகளுக்கு கடல் முழுவதையும் ஒரு செல் உயிரினங்கள்தான் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் திடீரென்று, உயிர்கள் மிகவும் சுவாரசியம் நிறைந்தவையாக மாறின. ஏனென்றால், உயிரினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட செல்களைப் பெற்று சிக்கலான உடலமைப்பு கொண்டவையாய் மாறத்தொடங்கின.
அதுமட்டுமல்லாமல், உயிர்கள் அளவிலும் மிகப்பெரியதாய் (அதாவது சுமார் 10 ஆயிரம் மடங்கு) மாறின’ என்று, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான தனது, ‘த வைட்டல் கொஸ்டின்’ (The Vital Question) எனும் தலைப்புகொண்ட நூலில் உயிர்களின் பரிணாமம் குறித்து விளக்குகிறார் யுனிவெர்சிட்டி காலேஜ் லண்டனின் பரிணாம வேதியியல் பேராசிரியராய் பணியாற்றும் நிக் லேன்.
பல நூற்றாண்டுகளுக்கு ஒரு செல் உயிரிகளாகவே தொடர்ந்த உயிர்களின் பரிணாமப் பயணத்தில், திடீரென்று அளவில் பெரிதாகவும் மற்றும் சிக்கல் நிறைந்த உடலமைப்பு கொண்டவையாகவும் உயிர்களை மாற்றிய இந்த குறிப்பிட்ட உயிரியல் நிகழ்வு அல்லது மாற்றமே, மனிதர்கள் உள்ளிட்ட மிகவும் சிக்கலான உயிரியல் அமைப்புகளைக் கொண்ட பல்வேறு உயிரினங்கள் தோன்றக் காரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு செல் உயிரிகள் பல செல் உயிரிகளாக மாறிய இந்த திடீர் மாற்றம் ‘எப்படி ஏற்பட்டது?’ என்பது தான் பரிணாம உயிரியலில் தற்போதுள்ள பல மில்லியன் டாலர் கேள்விகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. இது குறித்த பல கருதுகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள், பேராசிரியர் நிக் லேன் உருவாக்கிய ஒரு கருதுகோளானது ‘எனர்ஜி’ யை (ஆற்றலை) மையமாகக் கொண்டது. அதாவது: சிக்கலான உயிரியல் அமைப்புகளை உருவாக்க செல்களுக்கு அதிகமான ஆற்றல் வேண்டும். இந்த ஆற்றல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள, ஒரு செல் உயிரிகள் தற்போது ‘மைட்டோ காண்டிரியா’ என்று அழைக்கப்படும், மின்சக்தி மூலம் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட (அப்போதைய) ஒருவகை பாக்டீரியாக்களுடன் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்துவிட்டன.
இப்படி, இரண்டு ஒரு செல் உயிரிகள் இரண்டறக் கலந்து உயிருடன் இருப்பதும், ஒற்றுமையாக வாழ்வதும் பரிணாமத்தில் மிக மிக அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு. இத்தகைய நிகழ்வே சிக்கலான உயிர்களை உருவாக்கி இருக்கக்கூடும் என்றும் கூறுகிறது நிக் லேனுடைய கருதுகோள்.
முக்கியமாக, பரிணாமத்தில் இந்த நிகழ்வு ஒரே ஒரு முறைதான் நடந்திருக்க முடியும் என்கிறார் லேன். ஆக, ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து உருவான சிக்கலான அமைப்பு கொண்ட அந்த ஒரு செல் உயிரிலிருந்துதான் மனிதர்கள், மரங்கள், பறவைகள் உள்ளிட்ட தற்போதைய உலகின் அனைத்து உயிரினங்களும் தோன்றியிருக்கின்றன என்பதே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருதுகோளாகும்.
அது சரி, இதற்கும் ஏலியன்களின் புத்திக்கூர்மைக்கும் என்ன தொடர்பு என்றுதானே யோசிக்கிறீர்கள்? இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமியிலுள்ள உயிர்கள் எப்படி சிக்கலான உயிரியலமைப்பு கொண்டவையாய் மாறின என்பதைப் புரிந்துகொள்வதன் மூலமாக பூமியினுடைய உயிர்களின் வரலாற்றை புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதேசமயம், பிரபஞ்சத்தின் இதர கோள்களில் ஏலியன்களைத் தேடும்பொழுது, எந்த வகையான அறிகுறிகளைத் தேட வேண்டும் என்பதையும் இந்த புரிதல் சுட்டிக்காட்டக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிக்கலான உயிரிலமைப்பு கொண்ட உயிர்கள் உருவாகுவது மிக மிக அரிதான ஒரு உயிரியல் நிகழ்வு என்பது உண்மையானால், பிரபஞ்சத்தின் இதர கோள்களில் வாழக்கூடிய ஏலியன்கள் புத்திக்கூர்மை நிறைந்த உயிரினங்களாக இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. மாறாக, ஏலியன்கள் மிகச்சிறிய மற்றும் ஒரு செல் உயிரிகள் போல சாதாரண உடலமைப்பு கொண்டவையாகக் கூட இருக்கலாமே? என்ற சந்தேகம் வலுக்கிறது. முக்கியமாக, சிக்கலான உயிர்கள் தோன்ற அவசியமான ரசாயன மற்றும் உயிரியலமைப்புச் சூழல் உருவாகுவது மிக மிக அரிது என்பதால், அவை பூமியில் மட்டுமே இருக்கக்கூடும் என்றும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், பூமி தவிர்த்த பிற உலகங்களில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே மிகவும் அதிகம் என்கின்றனர் பெரும்பாலான விஞ்ஞானிகள்.
அப்படியானால், ‘ஏலியன்கள் நுண்ணுயிர்களாக இருக்குமோ?’.
இதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும்!
Related Tags :
Next Story