சனிக்கிரகத்தின் நிலவுக்குச் செல்லும் ‘செல்பி’ ரோபோ
பூமி தவிர்த்த வேறு கிரகங்களுக்கும் நிலவுகள் உண்டு. 1610-ம் வருடம், வியாழன் கிரகத்தை நான்கு நிலவுகள் சுற்றி வருகின்றன என்று கண்டறியப்பட்டது.
நிலவுக்கும் மனிதனுக்குமான பந்தம் குழந்தைப்பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. அழுகின்ற குழந்தைக்கு நிலவைக் காட்டி அம்மா ஊட்டும் நிலாச்சோறு முதல், சித்திரைப் பவுர்ணமி நிலவில் ஆற்றங்கரையில் அமர்ந்து குடும்பத்தோடு நிலாச்சோறு உண்ணும் பழக்கம் இன்றுவரை தமிழர்களுக்கு இருப்பது இதற்கு சான்றாகும்.
இங்கு நாம் குறிப்பிடுவது பூமியின் நிலவைப் பற்றி என்றாலும், பூமி தவிர்த்த வேறு கிரகங்களுக்கும் நிலவுகள் உண்டு. 1610-ம் வருடம், வியாழன் கிரகத்தை நான்கு நிலவுகள் சுற்றி வருகின்றன என்று கண்டறியப்பட்டது. இத்தாலிய கணித மேதை மற்றும் தத்துவ ஞானியான கலீலியோ கலீலி இதை உறுதிசெய்தார். அதனைத்தொடர்ந்து 1877-ல் ஆசாப் ஹால் என்பவர் செவ்வாய் கிரகத்தின் நிலவுகளான போபோஸ் மற்றும் டெய்மோஸ் (Phobos and Deimos) ஆகியவற்றை கண்டறிந்தார், பிறகு 1980-ல் சனிக்கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan) கண்டறியப்பட்டது.
இன்றுவரை யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ உள்ளிட்ட இதர கிரகங்களின் நிலவுகளையும் சேர்த்து மொத்தம் சுமார் 179 நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்கிறது நாசா. அதெல்லாம் சரி, இந்த நிலவுகளை எல்லாம் கண்டுபிடித்து என்ன செய்வது? என்று நீங்கள் கேட்கலாம்.
விண்வெளி மனிதனுக்கு வசப்பட்டதன் நீட்சியாக மனித இனம் கோள்விட்டு கோள் சென்று வாழும் அசாத்திய தகுதி கொண்ட ‘இன்டெர் ஸ்டெல்லார்’ உயிரினமாக மிக வேகமாக பரிணமித்து வருகிறது. இதற்கு செவ்வாய், வியாழன் உள்ளிட்ட கிரகங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகளே சாட்சி. அந்த வரிசையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்சிலாடஸ்சில் ஆய்வு செய்ய ஒரு ரோபோட்டை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
‘செல்பி’ (SELFI Sub millimeter Enceladus Life Fundamentals Instrument) எனும் பெயர்கொண்ட இந்த ரோபோட் என்சிலாடஸ்சில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும். முக்கியமாக, என்சிலாடஸ்சின் தென் துருவத்தில் உள்ள பனி ஊற்றுகளில் (ice spewing geysers) இருந்து வெளியாகும் நீராவியில் உள்ள ரசாயனங்களின் தகவல்களை ‘செல்பி ரோபோட்’ ஆய்வு செய்யும் என்கிறது நாசா.
‘செல்பி’யால் வெளியிடப்படக்கூடிய அதிக அலைவரிசை கொண்ட ரேடியோ அலைகளைக் கொண்ட சப் மில்லி மீட்டர் அலைநீளங்கள், குளிர்ந்த வாயுவில் உள்ள பல்வேறு வகையான மூலக்கூறுகளைக் கண்டறிய உதவும் என்கிறார் ‘செல்பி’ திட்டத்தின் தலைமை ஆய்வாளர் கோர்டான் சின்.
‘தண்ணீர் மற்றும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட மூலக்கூறுகள் குறிப்பிட்ட அலைவரிசையில் ரேடியோ அலைகளை வெளியிடுவதன் மூலம், ‘நான் தான் தண்ணீர் அல்லது கார்பன் மோனாக்சைடு’ என்று தகவல் ஒளிபரப்பு செய்யும் பண்பு கொண்ட சிறிய ரேடியோ ஸ்டேஷன்கள் போன்றவை’ என்கிறார் ஆய்வாளர் என்கிறார் கோர்டான்.
மேலும், என்சிலாடஸ்சின் பனி ஊற்றுகளில் இருந்து வெளியாகும் பனிப்புகையில் இருக்கக்கூடிய ரசாயன எச்சங்களை இனம் கண்டறிந்து கணக்கிடுவதன் மூலம், ‘செல்பி’ ரோபோட்டானது, என்சிலாடஸ்சின் பனிப்பரப்புக்கு அடியில் இருக்கும் கடல் குறித்த மேலதிக புரிதல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த ரசாயனத் தகவல்களின் அடிப்படையில், என்சிலாடஸ்சில் உயிர்கள் இருக்கின்றனவா? என்று கண்டறிய முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுபோல, என்சிலாடஸ்சின் அனைத்து வகையான புகைகளையும் ஆய்வு செய்வதன் மூலம், அதனுடையக் கடலின் ரசாயனப் பண்புகளைக் கண்டறிந்து என்சிலாடஸ்சின் உயிர்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உதாரணமாக, ஹைட்ரஜன் உள்ளிட்ட சுமார் 13 ரசாயன மூலக்கூறுகளை கண்டறியும் திறன் ‘செல்பி’ ரோபோட்டுக்கு உண்டு என்றும், அதன் மூலம் என்சிலாடஸ்சின் கடல் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் விளக்குகிறார் விண்வெளி ஆய்வாளர் கிறிஸ் ஜெர்மன்.
என்சிலாடஸ்சின் முந்தைய மற்றும் தற்போதைய உயிர்கள் குறித்த அறிகுறிகளை ‘செல்பி’யால் கண்டறிய முடியாவிட்டாலும், நம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கக்கூடிய இதர பனிக்கோள்கள் மீதான ஆய்வுகளுக்கு ‘செல்பி’யை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
ஆக மொத்தத்தில், பூமிக்கு அப்பாற்பட்ட உயிர்களைக் கண்டறிய ‘செல்பி’ கண்டிப்பாக உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
Related Tags :
Next Story