குன்றத்தூர்– ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?


குன்றத்தூர்– ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 13 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரை திறக்கும்போதெல்லாம் சாலை துண்டிக்கப்பட்டு, 40 கிராமங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே குன்றத்தூர்– ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பூந்தமல்லி,

சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 2015–ம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது. பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுத்தியது.

அன்று முதல் சென்னையில் ஓரிரு நாள் பலத்த மழை பெய்தாலே, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி விட்டதா? என்று பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. மழை பெய்யும் போதெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி பாதிப்பு தான் மக்களின் கண் முன் வந்து செல்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. நீர்மட்டம் 24 அடி. பாதுகாப்பு கருதி 21 அடியை தொட்டவுடன் ஏரியில் இருந்து 19 கண் மற்றும் 5 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படும்.

ஏரியின் மதகு பகுதி குன்றத்தூர்– ஸ்ரீபெரும்புதூர் சாலை அருகில் அமைந்து உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படும் போது குன்றத்தூர்– ஸ்ரீபெரும்புதூர் சாலையின் குறுக்கே பாய்ந்தோடி, அடையாறு ஆற்றில் கலக்கும். இங்கு பாலம் இல்லாததால், மழை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படும் போதெல்லாம் இந்த சாலை துண்டிக்கப்படுகிறது.

சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர்– மீஞ்சூர் வெளிவட்ட சாலை மற்றும் போரூர், பல்லாவரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக குன்றத்தூர்– ஸ்ரீபெரும்புதூர் சாலை உள்ளது. தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் இயங்கும் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ–மாணவிகள் என அனைவரும் இந்த வழியாகத்தான் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

உபரிநீர் திறந்து விடும் போது இந்த சாலை துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளால் இந்த சாலையை கடக்க முடிவதில்லை. ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்ட பிறகே மீண்டும் இந்த சாலையில் போக்குவரத்து தொடங்கும். இதனால் மழை காலங்களில் சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், பூந்தண்டலம், சோமங்கலம், அமரம்பேடு, நடுவீரப்பட்டு உள்ளிட்ட 20 கிராம மக்கள் குன்றத்தூர் மற்றும் சென்னை பகுதிகளுக்கு வரமுடிவதில்லை.

அதே போல குன்றத்தூர், கொல்லச்சேரி, சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம், மாங்காடு, கோவூர், தண்டலம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் சிறுகளத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் சிலர் அவசர தேவைக்கு செல்ல வேண்டும் என்றால் செம்பரம்பாக்கம் ஏரி மதகின் மீது பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் 40 கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே குன்றத்தூர்– ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள், இந்த சாலையில் ரூ.3 கோடியில் தரைப்பாலம் அமைக்கப்படும் என அப்போது அறிவித்தார். அதற்கான மண் பரிசோதனை பணிகளும் நடந்து, பாலம் கட்ட பூமிபூஜையும் நடைபெற்றது. ஆனால் அதன்பிறகு இந்த சாலை, நான்கு வழிசாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதனால் இங்கு தரைப்பாலம் அமைக்க முடியாது, அப்படியே கட்டினாலும் அதற்கு மேல் தண்ணீர் செல்லும் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கும் போது இந்த சாலை துண்டிக்கப்படும். அப்போது அவசர தேவைக்கு கூட யாரும் எங்கும் செல்ல முடியாது. ஏரியில் உபரி நீர் திறக்கும் சூழல் வரும்போது வீட்டை காலி செய்து விட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து விடுவோம். இதனால் எங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Next Story