தேங்கி கிடக்கும் குப்பைகள் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை
மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அந்த பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால சிற்பங்களை காண வரும் சுற்றுலா பயணிகள் பலர் அங்குள்ள கடற்கரைக்கு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். குறிப்பாக கடற்கரை கோவிலுக்கு வடக்கு பக்கம் உள்ள கடற்கரை பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன.
இந்த ஒட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சட்டத்துக்கு புறம்பாக கடற்கரையில் விடப்படுகிறது. அதேபோல் உணவகங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கடற்கரையில் கொட்டப்படுகின்றன.
இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இங்குள்ள கடற்கரையில் அமர்ந்து பொழுது போக்குவது வழக்கம். தற்போது இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை மணலில் குப்பைகள் உள்ளதை பார்த்து முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குப்பைக்கூளங்களுடன் சீரழிந்து காணப்படும் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ள மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் கழிவு நீரை திறந்துவிடும் நபர்கள் மீதும், குப்பைகள் கொட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.