தூத்துக்குடி விமானநிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக முதல்– அமைச்சர் பாதுகாப்பு வாகனங்களில் குறைந்த அளவு டீசல் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 12.55 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
அவரை மாவட்ட கலெக்டர்கள் வெங்கடேஷ் (தூத்துக்குடி), சந்தீப் நந்தூரி (நெல்லை), மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன் ஆகியோர் புத்தகங்கள் பரிசாக வழங்கி வரவேற்றனர்.
பின்னர் அவர் கார் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக முதல்–அமைச்சருக்கான பாதுகாப்பு அணிவகுப்பில் பங்கேற்ற சில கார்களில் குறைந்த அளவு டீசல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குறைந்த அளவு டீசல் இருந்த வாகனங்கள், டீசல் நிரப்புவதற்காக விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த வாகனங்கள் டீசல் நிரப்பியபிறகு முதல்–அமைச்சர் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம் பெற்றன. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.