பாலக்கரை- காந்தி மார்க்கெட் இடையே சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பாலக்கரை- காந்தி மார்க்கெட் இடையே சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Dec 2017 11:15 PM GMT (Updated: 12 Dec 2017 11:08 PM GMT)

திருச்சி பாலக்கரை முதல் காந்தி மார்க்கெட் வரையுள்ள சாலையோரங் களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருச்சி,

திருச்சி மாநகர சாலையோரங்களில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து நடப்பதாக கலெக்டர் அலுவலகத்துக்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கும் பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்கடை, வெங்காயமண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் தற்போது போக்குவரத்து நெருக்கடியின்றி வாகனங்கள் சென்று வருகிறது.

இதைப்போன்று திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா சாலையில் இருந்து அரியமங்கலம் பால்பண்ணை வரை சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலைமையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் வாக்குவாதம்

3 பொக்லைன் எந்திரங்கள், 3 லாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நேற்று காலையில் பாலக்கரை ரவுண்டானா சாலையில் தொடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாலை வரை நடைபெற்றது. அப்போது சாலையோரங்களின் இருபுறமும் தற்காலிகமாக நடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளும், சில கடைகளின் முன்பு போடப்பட்டிருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைகளும் அகற்றப்பட்டன. மழைநீர் வடிகால்கள் மீது ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சில பெட்டிக்கடைகளும் அகற்றப்பட்டன.

இதற்கு சில இடங்களில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் போது எந்தவொரு பிரச்சினை ஏற்படாமல் இருக்க காந்தி மார்க்கெட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் இன்று (புதன்கிழமை) வரகனேரி, மகாலெட்சுமி நகர், அரியமங்கலம் பால்பண்ணை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story