ரூபாய் நோட்டுகளை நகல் எடுத்து கொடுத்து ஆடு வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் போலீஸ் விசாரணை


ரூபாய் நோட்டுகளை நகல் எடுத்து கொடுத்து ஆடு வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2017 5:04 AM IST (Updated: 13 Dec 2017 5:04 AM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே ரூபாய் நோட்டுகளை நகல் எடுத்து கொடுத்து ஆடு வாங்கி தொடர்ந்து 2-வது முறையாக நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே செம்மாணிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவர் தனது வீட்டில் 6 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 7-ந் தேதி அங்குள்ள அப்பிச்சிமார் கோவில் அருகே தனது ஆடுகளை ராமசாமி மேய்த்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் எங்களுக்கு ஆடுகள் விலைக்கு வேண்டும், பணத்தை உடனே தருகிறோம் என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து ராமசாமி 2 ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் விலை பேசினார். அதை ஒப்புக்கொண்ட அந்த நபர்கள், 4 புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 2 என ரூ.10 ஆயிரத்தை ராமசாமியிடம் கொடுத்தனர். அதை வாங்கிய கொண்ட அவர், 2 ஆடுகளை அந்த நபர்களிடம் கொடுத்தார்.

பின்னர் அந்த நபர்கள் ஆடுகளுடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ரூபாய் நோட்டுகளின் நகல்

அதைத்தொடர்ந்து ராமசாமி அந்த பணத்தை வீட்டிற்கு எடுத்துச்சென்று தனது மகன் கோதண்டனிடம் காண்பித்தார். அதை வாங்கி பார்த்த அவர், அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் ஒரே எண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதித்தபோது, ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இதையடுத்து நகல் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஆடுகளை விலைக்கு வாங்கி சென்ற மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னூர் போலீஸ் நிலையத்தில் கோதண்டன் புகார் அளித்தார்.

தொடர்ந்து 2-வது முறையாக...

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், இதேபோல் அன்னூர் பகுதியில் கருப்பு நிற காரில் வந்த 2 ஆசாமிகள் நகல் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஆடுகளை விலைக்கு வாங்கி சென்றனர். எனவே அவர்கள் தான் மீண்டும் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து 2-வது முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதால் அந்த பகுதி விவசாயிகள், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story