விமானத்தின் உள்புற தோற்றம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ‘அனுபுத்தி’ ரெயில் பெட்டிகள்
விமானத்தின் உள்புற தோற்றம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ‘அனுபுத்தி’ ரெயில் பெட்டிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
மும்பை,
மத்திய ரெயில்வேயில் கடந்த மே மாதம் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட தேஜஸ் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தநிலையில் விமானத்தின் உள்புற தோற்றம் கொண்ட ரெயில் பெட்டிகளை தயாரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த ரெயில் பெட்டிகளுக்கு ‘அனுபுத்தி’ என பெயரிடப்பட்டது. தலா ரூ.2 கோடியே 84 லட்சம் செலவில் இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஒருங்கிணைந்த ரெயில்பெட்டிகள் தொழிற்சாலையில் நடந்து வருகிறது. இதுவரை 10 அனுபுத்தி ரெயில்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் தலா 2 பெட்டிகள் மத்திய, மேற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் விரைவில் சதாப்தி ரெயில்களுடன் இணைக்கப்பட உள்ளன.அனுபுத்தி ரெயில் பெட்டியில் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளுக்கு நீல நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. அதில் இலை, மலர் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளது பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இதே போல பெட்டியின் உள்புறம் விமானம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 56 இருக்கைகள் உள்ளன. இவை பயணிகள் சாய்ந்து படுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதில் கால் வைக்கவும் ஸ்டாண்டு வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல பயணிகளின் பொழுது போக்கிற்காக சீட்டின் முன்புறம் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அவர்கள் சினிமா படம், பாடல்களை பார்க்கலாம். மேலும் பென்டிரைவ் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதேபோல கண்பார்வை இல்லாதவர்களும் தங்கள் இருக்கையை கண்டுபிடிக்கும் வகையில் பிரெய்ல் முறையில் சீட் எண் எழுதப்பட்டு உள்ளது. மேலும் கழிவறைகளில் சென்சார் முறையில் செயல்படும் தண்ணீர் குழாய்கள், கை உலர்பான், சோப் டிஸ்பென்சர் போன்றவை இடம்பெற்றுள்ளன. பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அனுபுத்தி ரெயில் பெட்டிகளுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Related Tags :
Next Story