சட்டசபையின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


சட்டசபையின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 12 Dec 2017 11:54 PM GMT (Updated: 2017-12-13T05:24:04+05:30)

விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபையின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாக்பூர்,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நேற்று 2–வது நாளாக கூடியது. மேல்–சபை கூடியதும் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தவிர, விவசாயிகளிடம் அரசு கொள்ளையடிப்பதாகவும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கூறி, சபையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். இதனால், மேல்–சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதன் காரணமாக சபை அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்திவைப்பை கண்டது. சபை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில், துணைமானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டசபையிலும், கேள்வி நேரத்துக்கு பின்னர் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை மேற்கோள்காட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். விவசாயிகளின் பிரச்சினைகளை களைவதில் பாரதீய ஜனதா– சிவசேனா தலமையிலான அரசு பரிதாபகரமான தோல்வியை தழுவி விட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

சபையை தொடர்ந்து நடத்துவதில், சபாநாயகர் இருக்கையில் இருந்த யோகேஷ் தாக்கருக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால், சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.


Next Story