திண்டுக்கல்லில் மொபட்டுகளை குறிவைத்து திருடிய முதியவர் கைது


திண்டுக்கல்லில் மொபட்டுகளை குறிவைத்து திருடிய முதியவர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2017 3:15 AM IST (Updated: 14 Dec 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், மொபட்டுகளை குறிவைத்து தொடர்ந்து திருடி வந்த முதியவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில், மொபட்டுகளை குறிவைத்து தொடர்ந்து திருடி வந்த முதியவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 36 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொபட் காணாமல் போனதாகவே அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் மொபட்டுகளை மட்டும் குறிவைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

பழைய குற்றவாளிகள், இருசக்கர வாகனங்களை திருடுபவர்களின் பட்டியல்களை சேகரித்து விசாரணை நடத்தினர். ஆனால் திருட்டு சம்பவத்தில் அவர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் நகர் பகுதியில் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் திண்டுக்கல்–கரூர் சாலையில் செல்லமந்தாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ஒருவர் மொபட்டை திருடியுள்ளார். இது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை துருப்பு சீட்டாக வைத்து தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கினர்.

இதையடுத்து ஒருவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் தான் மொபட்டுகளை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. விசாரணையில் அவர் சின்னாளப்பட்டியை சேர்ந்த கோட்டைசாமி (வயது 60) என்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் அவரை கைது செய்தனர்.

கோட்டைசாமி, பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த ஜஸ்டின் திரவியம் (32) என்பவருடன் சேர்ந்தும் பல மொபட்டுகளை திருடியுள்ளார். இவர்கள் திருடும் மொபட்டுகளை அதே பகுதியை சேர்ந்த ஆணழகன் என்பவரிடம் விற்று வந்துள்ளனர். இதையடுத்து ஜஸ்டின் திரவியம், ஆணழகன் ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 36 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 15 மொபட்டுகள் திண்டுக்கல் நகர் பகுதியில் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னாளப்பட்டியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் கோட்டைசாமி, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மொபட்டுகளை கண்காணிப்பார். பின்னர் மொபட் மீது சிறிது நேரம் அமர்ந்திருப்பார். மொபட்டை யாரும் எடுக்க வரவில்லை என்றால் தன்னிடம் உள்ள இரும்பு கம்பியை பயன்படுத்தி பக்கவாட்டு பூட்டை உடைத்து அதனை அங்கிருந்து நகர்த்தி சென்றுவிடுவார். இதையடுத்து மொபட்டை, ஜஸ்டின் திரவியத்துடன் சேர்ந்து ஆணழகனிடம் கொடுப்பார். பின்னர் அவர்கள் மொபட்டின் நம்பரை மாற்றி கிராம பகுதிகளுக்கு கொண்டு சென்று ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரத்துக்கு விற்று வந்துள்ளனர். விலை மிக குறைவாக இருப்பதால் கிராம பகுதியினரும் ஆவணங்கள் இன்றி மொபட்டை வாங்கியுள்ளனர்.

முதுமையை பயன்படுத்தி கோட்டைசாமி இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். முதலில் சில மொபட்டுகளை திருடியபோது போலீசில் சிக்காததால் தொடர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் முதியவர் என்பதால் தன்னை யாரும் ‘திருடன்’ என நினைக்கமாட்டார்கள் என்றும், மோட்டார் சைக்கிளை ஓட்ட தெரியாததால் மொபட்டுகளை மட்டும் திருடியதாகவும் போலீசாரிடம் கோட்டைசாமி கூறியுள்ளார்.


Next Story