ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 9:45 PM GMT (Updated: 2017-12-14T00:33:00+05:30)

ஓகி புயலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து மீட்க வலியுறுத்தி கூடலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடலூர்,

கன்னியாகுமரியில் ஓகி புயல் தாக்குதலில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலரை இதுவரை காணவில்லை. அவர்கள் எங்கு எந்த நிலையில் உள்ளனர் என தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஓகி புயல் பாதிப்பில் மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் அமீதுகான் தலைமை தாங்கினார். கூடலூர் தொகுதி பொருளாளர் சிவகுமாரன், இணை தலைவர் விஜயகுமார், இணை செயலாளர் விருமாண்டி, ஒன்றிய செயலாளர் சசிகுமார், தலைவர் ஜெயராஜ், வேலாயுதம், சரவணபவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் கேதீசுவரன், தொகுதி செயலாளர் பொன்மோகனதாஸ் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மீனவர்களை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Next Story