நிதிநிலை தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


நிதிநிலை தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2017 11:45 PM GMT (Updated: 13 Dec 2017 8:37 PM GMT)

புதுவை நிதிநிலை தொடர்பாக விவாதிக்க சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் பதவியேற்ற நாளில் இருந்து தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இதனால் அரசு நிர்வாகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. மறுபுறம் பெரிய அளவில் குழப்பமான சூழ்நிலை உள்ளது. அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, அரசு ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலை இருப்பதாக கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்தினால் அரசு ஊழியர்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது. நிதி தொடர்பாக அவசர நிலை பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே நாங்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தின்போது நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டோம். இப்போது நிதிநிலை தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.

இதற்கிடையே புதுவை கவர்னர் கிரண்பெடி தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். இப்போது கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். புதுவையில் 600 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவர் பதவியேற்று 2 வருடங்களாகி விட்ட நிலையில் இதுவரை தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறாமல் இப்போது மட்டும் தெரிவிப்பது ஏன்? தனிநபர் கொடுக்கும் அழுத்தத்திற்காக கடன் கொடுக்காதீர்கள் என்று கவர்னர் கூறியுள்ளார். அந்த தனி நபர் யார்?

புதுவையில் தற்போதைய நிலையில் ஆட்சிமாற்றம் தேவை. அந்த ஆட்சி மாற்றம் என்.ஆர்.காங்கிரஸ் அல்லது அ.தி.மு.க. தலைமையில் அமையவேண்டும். புதுவை முதல்–அமைச்சரைப்பற்றி பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். இதுபோன்று விமர்சிப்பது பாரதீய ஜனதாவுக்கு அழகல்ல. அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாரதீய ஜனதா நினைத்தால் ஒரே நாளில் புதுவையில் ஆட்சியை மாற்றிவிடலாம் என்று எச்.ராஜா கூறியுள்ளார். பாரதீய ஜனதாவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாதநிலையில் அவர்களால் எப்படி ஆட்சியை மாற்ற முடியும்?

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story