திருச்செந்தூரில், பொதுமக்கள் சாலைமறியல் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை


திருச்செந்தூரில், பொதுமக்கள் சாலைமறியல் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2017 11:00 PM GMT (Updated: 13 Dec 2017 8:58 PM GMT)

பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூரில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சபாபதிபுரம் தெரு வழியாக கோவில் பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையானது பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த மாதம் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து அங்கு ரூ.50 லட்சம் செலவில் சிமெண்டு தள கற்கள் பதிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே அந்த சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் பொதுமக்கள் நேற்று காலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார், வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், நகர பஞ்சாயத்து அலுவலர் மாதவன் ஆகியோர் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு சிமெண்டு தள கற்கள் பதிப்பதற்கான ஒப்பந்த ஆணை இன்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story