தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஆட்டோ, கார், வேன்களுக்கு அனுமதி வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்


தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஆட்டோ, கார், வேன்களுக்கு அனுமதி வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:15 AM IST (Updated: 14 Dec 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் தனியார் நிறுவன ஆட்டோ, கார், வேன்களுக்கு அனுமதி வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரையிடம், டிரைவர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலைய ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள் சங்க கூட்டமைப்பினர் நிர்வாகிகள் முனியாண்டி, கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட டிரைவர்கள், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பல ஆண்டுகளாக தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் செலுத்தி ஆட்டோ, கார், வேன் ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம். 150-க்கும் மேற்பட்ட அனைத்து வாகன டிரைவர்களின் குடும்ப வாழ்வாதாரமும் இதனை நம்பி உள்ளது.

மறுபரிசீலனை

கடந்த காலங்களில் ரெயில்வே நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் சுய கட்டுப்பாட்டுடன் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த நிலையில் தங்கள் நிர்வாகத்திற்குட்பட்ட தஞ்சை ரெயில் நிலைய பகுதியில் தனியார் நிறுவனம் வாடகை கார், வேன், ஆட்டோ நிறுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே புதிதாக தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளதால் எங்களது தொழில் முற்றிலும் பாதிக்கும். எனவே கலெக்டர் அளித்துள்ள அனுமதி முடிவை மறுபரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். 

Next Story