தண்டவாளத்தில் டயர்கள் வீச்சு; சரக்கு ரெயில் தப்பியது எம்.காம். பட்டதாரி கைது


தண்டவாளத்தில் டயர்கள் வீச்சு; சரக்கு ரெயில் தப்பியது எம்.காம். பட்டதாரி கைது
x
தினத்தந்தி 14 Dec 2017 4:45 AM IST (Updated: 14 Dec 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே தண்டவாளத்தில் வேன் டயர்கள் வீசப்பட்டு கிடந்தன. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் அதன் மீது மோதி விட்டு சிறிது தூரம் சென்று நின்றதால் விபத்தில் இருந்து தப்பியது. இதுதொடர்பாக எம்.காம். பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

சேலத்தில் இருந்து மேட்டூருக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ரெயிலும், சரக்கு ரெயிலும் சென்று வருகின்றன.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1.05 மணியளவில் மேட்டூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு சரக்கு ரெயில் ஒன்று வந்தது. இந்த ரெயில் மேட்டூர்-ஓமலூர் இடையே இலவமரத்தூர் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வேன் டயர்கள் கிடந்தன. அதன் மீது மோதிய ரெயில் சக்கரம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் டயர்களை இழுத்து சென்றது. இதை அறிந்ததும் ரெயிலை நிறுத்திய டிரைவர் அதில் இருந்து இறங்கி வந்து டயர்களை அப்புறப்படுத்திவிட்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கிருந்து ரெயிலை ஓட்டிச்சென்றார். இதனால் சரக்கு ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.

இதையடுத்து அந்த சரக்கு ரெயில் அங்கிருந்து சுமார் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மற்றும் போலீசார், தண்டவாளத்தில் டயர்களை வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக சேகர் (வயது 40) என்ற எம்.காம். பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். இவர் இலவமரத்தூர் அருகே உள்ள பூசாரியூரைச் சேர்ந்தவர் ஆவார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மனநிலை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் டயர்களை வீசினாரா? அல்லது ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story