மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2017 4:45 AM IST (Updated: 14 Dec 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை டவுன் ஆசாத் தெருவை சேர்ந்தவர் டாக்டர் முகமது அக்பர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி லூப்னா. மகப்பேறு மருத்துவரான இவர் நெல்லை டவுனில் தனியாக ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இவர்களுடைய மூத்த மகன் இம்ரான் முகமது(வயது 21). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகன், நெல்லையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இம்ரான் முகமது, சென்னையில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தார். சென்னையில் இருந்து வந்ததில் இருந்து அவர் யாருடனும் சரிவர பேசாமல் தனியாகவே இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் அவருடைய தாய் லூப்னா, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு கண்பரிசோதனைக்கு சென்று விட்டார். கண்பரிசோதனை முடித்து இரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது இம்ரான் முகமது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் அவரை தூக்கில் இருந்து இறக்கி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர், இம்ரான் முகமது இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இம்ரான் முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இம்ரான் முகமதுவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது. இதனால் அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. 

Next Story