எதிர்க்கட்சிகள் அமளி சட்டசபை 3 முறை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக சட்டசபை நேற்று 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
நாக்பூர்,
அப்போது, விவசாயிகளின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, பாரதீய ஜனதா– சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரிந்துகட்டிக் கொண்டு கோஷம் எழுப்பினர். அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டசபையை 10 நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
சபை மீண்டும் கூடியதும், சபாநாயகர் கேள்வி நேரத்தை தொடர்ந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பம் முன்பை விட அதிகமாக இருந்ததால், மேலும் 10 நிமிடத்துக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
சபை மீண்டும் கூடியபோதும் நிலைமையில் மாற்றம் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால், அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த சுதாகர் தேஷ்முக் சபையை 3–வது முறை ஒத்திவைத்தார்.கேள்விநேரத்தின் போது மொத்தம் 56 கேள்விகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில், நாக்பூர் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு கேள்வி மட்டுமே திலீப் மானே எம்.எல்.ஏ.வால் கேட்கப்பட்டது. மற்ற கேள்விகளை கேட்பதற்கு இடமளிக்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், மேல்–சபையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நேற்று 4 முறை தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டது. சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு அதன் தலைவர் அறிவுறுத்திய போதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், செவிசாய்க்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே இருந்தனர்.இதனால், பிற்பகல் 1.30 மணியளவில் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக 3–வது நாளாக நேற்றும் மேல்–சபையின் அலுவல் பணி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.