கார்வாரில் இந்து அமைப்பு தொண்டர் கொலை: உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் மனு கொடுப்போம்
கார்வாரில் இந்து அமைப்பு தொண்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் மனு கொடுப்போம் என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் ஷோபா எம்.பி. கூறினார்.
பெங்களூரு,
கார்வார் மாவட்டம் குமட்டாவில் இந்து அமைப்பு தொண்டர் பரேஸ் மேஸ்கா என்பவரின் கொலை வழக்கை மூடிமறைக்க கர்நாடக அரசு முயற்சி செய்வது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதனால் இந்த சம்பவத்தில் இருக்கும் உண்மைகள் வெளிவர வாய்ப்பு இல்லை. அதனால் நாங்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து மனு கொடுப்போம். அப்போது இந்த விவகாரம் குறித்து தேசிய விசாரணை முகமை மூலம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுப்போம்.
சித்தராமையா திப்பு சுல்தான் மறுஜென்மம் எடுத்து வந்தது போல் ஆடுகிறார். இந்துக்களை பாதுகாக்கும் நோக்கம் அவருக்கு இல்லை. இந்துக்கள் மீது தாக்குதல் நடந்தாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறார். பரேஸ் மேஸ்கா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இங்குள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். பரேஸ் மேஸ்கா உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கிய டாக்டர்கள் மாயமாகிவிட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.தடய அறிவயல் சோதனை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்த 2 அறிக்கைகளில் உள்ள உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த கொலை சம்பவத்தை மாநில அரசு சிறிய சம்பவம் என்று சொல்கிறது. இது சரியல்ல.
இவ்வாறு ஷோபா கூறினார்.