ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளை வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது


ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளை வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2017 4:45 AM IST (Updated: 15 Dec 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தொடர்ந்து கைவரிசையில் ஈடுபட்டு ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

கோவை-அவினாசி ரோடு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே இருக்கும் ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 9-ந் தேதி நள்ளிரவு 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த ரோட்டில் வாகன நடமாட்டம் அதிகமாக இருந்ததால் கொள்ளையடிக்க முடியவில்லை. இதனால் அந்த கொள்ளையர்கள் ஏமாற்றத்து டன் திரும்பினார்கள்.

பின்னர் அவர்கள் 10-ந் தேதி அதிகாலை 1.15 மணிக்கு பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் ‘இன்டஸ்இன்ட்‘ வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்துவிட்டு, மெயின் ஷட்டரை அடைத்தனர். உள்ளே சென்றதும், அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் ஏதும் பதிவாகாமல் இருப்பதற்காக ஸ்பிரே மூலம் ரசாயன நுரையை அடித்தனர். பிறகு அலாரம் அடிக்கும் கருவிக்கு செல்லும் ஒயரின் இணைப்பை துண்டித்தனர்.

அதன் பிறகு கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதற்குள் இருந்த ரூ.3.35 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அதன் அருகில் இருக்கும் ‘ஆக்சிஸ்‘ வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றனர். அங்கும் இதுபோன்று செய்து எந்திரத்தை உடைத்து ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 200-ஐ கொள்ளையடித்தனர். பின்னர் அதன் மெயின் ஷட்டரை மூடிவிட்டு அதில் பூட்டுப்போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பகுதியில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஏ.டி.எம். மையங்களுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை சம்பவம் பதிவாகவில்லை என்பதால், அதன் அருகில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கைவரிசை காட்டியது வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என்பதும், போலி நம்பர் பிளேட் பொருத்தி காரில் வந்து இந்த சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

எனவே அந்த கொள்ளையர்களை பிடிக்க 50 போலீசார் கொண்ட 7 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், கைரேகை பதிவுகள், செல்போன் அழைப்பு களின் பட்டியல் ஆகியவற்றை வைத்து விசாரணையில் இறங்கினார்கள். அதில் 8 பேர் கொண்ட கும்பல் தனித்தனி பிரிவுகளாக பிரிந்து இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா மேற்பார்வையில், அந்த கொள்ளையர்களை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கொள்ளையர்கள் செல்லும் கார் நம்பர் பிளேட்களை அடிக்கடி மாற்றியதும் கண்டறியப்பட்டது.

இதற்கிடையே, அந்த கும்பல் போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் நாமக்கல் வழியாக வடமாநிலத்துக்கு தப்பிச்செல்ல உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அரியானா மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று பரமத்திவேலூர் பகுதியில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி வேகமாக வந்தது. இந்த காரை சோதனையிடுவதற்காக அங்கிருந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டையை உடைத்து கொண்டு அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து சினிமா பாணியில் போலீசார் அந்த காரை வாகனங்களில் பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதனால் அந்த காரில் இருந்த 3 பேர், இறங்கி ஓட தொடங்கினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். அவர்கள் மேற்கு பாலப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் போலீசார் அந்த கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்குள்ள ஜவ்வரிசி ஆலை ஒன்றின் அருகே பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது போன்ற பை ஒன்று கிடந்தது. அதில் துணிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தப்பிய மர்ம நபர்கள் அந்த பகுதியில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என சுதாரித்து கொண்ட போலீசார், அங்கு கூடிய பொதுமக்களிடம், அனைவரும் தங்களின் வீடுகளில் உள்ள மொட்டைமாடி மற்றும் கழிவறைகளில் தேடுமாறு அறிவுறுத்தினர். இதற்கிடையே, மோப்பநாயும் அங்கு வரவழைக்கப்பட்டது.

கொள்ளையர்களின் துணி இருந்த பையை மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நிலையில் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தார்.

அப்போது அங்கு வடமாநில வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் பாரப்பூர் மாவட்டம் தனகமா என்ற பகுதியை சேர்ந்த சுபேர் (வயது 20) என்பது தெரியவந்தது.

மேலும் சுபேர் வடமாநிலத்தை சேர்ந்த ஏ.டி.எம். கொள்ளை கும்பலை சேர்ந்தவன் என்பதும், கோவையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனுடன் வந்த மீதமுள்ள கொள்ளையர்கள் 2 பேரையும் மேற்கு பாலப்பட்டி கிராமம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினர்.

அதே நேரத்தில் ஆயுதபடை போலீசாரும், பொதுமக்கள் உதவியுடன் ஆங்காங்கே தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ‘ஹெலிகேம்’ என்ற ஆளில்லா குட்டி விமானம் மூலமும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், அங்குள்ள புதருக்குள் 2 கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதற்கிடையே, கீரம்பூர் சுங்கச்சாவடிக்கு அதிகாலை 4.10 மணி அளவில் புதுடெல்லி பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருப்பவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என்பதை அறிந்து கொண்ட போலீசார் சுங்கச்சாவடி முன்பு தக்காளி லோடு ஏற்றிய லாரி ஒன்றை சாலையின் குறுக்காக மறித்து நிறுத்தி அந்த காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 2 பேரையும் போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் லவாடா கிராமத்தை சேர்ந்த சால்மன் என்கிற முபாரக் (30), அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அமீத்குமார் (35), உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாக் (32), பீகார் மாநிலம் நீடெல்லி மாவட்டத்தை சேர்ந்த சுல்பிஹீர் (25) என்பதும் தெரியவந்தது.

மேலும் வடமாநில கொள்ளையர்கள் பதுங்குவதற்காக வாகனங்களில் சேலத்துக்கு தப்பி வருகிறார்களா? என்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு, சேலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று வேகமாக வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதற்குள் 4 இரும்பு ராடு, 2 பெரிய அளவிலான ஸ்குரு டிரைவர் உள்பட பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் லாரியில் வந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போது, அந்த வழியாக வடமாநில பதிவு எண் கொண்ட மற்றொரு லாரி வந்தது.

அந்த லாரியையும் போலீசார் தடுத்து நிறுத்தியபோது, அதற்குள் இருந்த 3 பேரும் மிரட்சியுடன் விழித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களையும் பிடித்தனர். பின்னர் போலீசார் அவர்கள் 6 பேரையும் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அதில் 3 பேர் கோவையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் தொடர்புடை யவர்கள் என்பது தெரிவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீன் (34), சுபேர் என்கிற சுரேஷ் (33), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகசூம்கான் (34) என்பது தெரிந்தது.

இதற்கிடையே நாமக்கல் மற்றும் சேலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் கோவை மாநகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்களை கோவைக்கு அழைத்து வருவதற்காக கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர்கள் பாலமுருகன், பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அவர்களிடம் நாமக்கல் மற்றும் சேலம் போலீசார் வடமாநிலத்தை சேர்ந்த 8 பேரையும் ஒப்படைத்தனர். அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றப்பட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோவை கொண்டு வரப்பட்டனர்.

பிறகு அவர்களை போலீசார் கோவையில் உள்ள ரகசிய இடத்தில் வைத்தனர். அவர்களிடம் போலீஸ் கமிஷனர் பெரியய்யா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 2 கியாஸ் வெல்டிங் எந்திரங்கள், 2 கார், ஒரு லாரி மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story