கடலூர் மண்டல அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


கடலூர் மண்டல அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2017 4:51 AM IST (Updated: 15 Dec 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மண்டல பொதுமேலாளர் அலுவலகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடலூர்,

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே நடத்தி தீர்வுகாண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதேகோரிக்கைக்காக 14–ந்தேதியும்(நேற்று), 15–ந்தேதியும்(இன்று) கடலூர் மண்டல பொதுமேலாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர். அதன்படி கடலூர் மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போராட்டத்தின் தொடக்கமாக பணிமனை நுழைவுவாயிலில் திரண்டு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் போட்டனர். பின்னர் பணிமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் கூறியதாவது:–

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(அதாவது இன்று) வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். அதற்குள் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எங்கள் போராட்டம் வேலை நிறுத்த போராட்டமாக தொடரும். வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக நிர்வாகத்திடம் ஏற்கனவே நோட்டீசு கொடுத்து உள்ளோம். காத்திருப்பு போராட்டத்தில் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பங்கேற்று உள்ளதால், பல பஸ்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டு உள்ளன.  இவ்வாறு பழனிவேல் கூறினார்.

அப்போது தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பாஸ்கரன்(சி.ஐ.டி.யு.), வீரமணி(பாட்டாளி தொழிற்சங்கம்) கருணாநிதி, தண்டபாணி, மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story