பெங்களூரு வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்
டெல்லியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு,
ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, ரெயில் நிலையத்தின் வாகன நிறுத்தத்தில் சந்தேகப்படும் படியாக நின்ற மர்மநபர்கள் 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது அவர்களின் பைகளில் துணிகள் இருந்ததும், துணிகளுக்கு இடையே போதைப்பொருள் (ஆம்டமைன்) இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அதிகாரிகள் பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு சென்னை மண்ணடியை சேர்ந்த சையத் அப்துல் காதர்(வயது 37), அவருடைய டிரைவர் அபு தாகீர்(38) மற்றும் சர்தார்(52) ஆகியோர் என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான 25 கிலோ ஆம்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், டெல்லியில் இருந்து அவர்கள் பெங்களூரு வழியாக சென்னை திருவல்லிக்கேணிக்கு போதைப்பொருளை கடத்திச் சென்று, அங்குள்ள ஒருவரிடம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. அத்துடன் டெல்லியில் இருந்து ரெயிலில் பெங்களூரு வந்த அவர்கள், அங்கிருந்து பஸ்சில் சென்னைக்கு செல்ல முயற்சித்தபோது சிக்கியதும் தெரியவந்தது.இதற்கு முன்பும் அப்துல் காதர், தனது கார் டிரைவர் அபு தாகீருடன் சேர்ந்து தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. ஆனாலும், அப்துல் காதர், அபு தாகீர் மற்றும் சர்தார் ஆகிய 3 பேரும் சேர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த 9–ந் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்ற அவர்கள் கடந்த 12–ந் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தபோது அதிகாரிகளிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. கைதான 3 பேர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.