வேலூர் சிறையில் இருந்து தப்பிய கைதி 6 மணிநேரத்தில் சிக்கினார்
வேலூர் மத்தியசிறையில் இருந்து தப்பி சென்ற கொலை வழக்கு கைதி 6 மணி நேரத்தில் சிக்கினார். பர்கூரில் உள்ள கள்ளக்காதலியை பார்க்க சென்ற போது போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் கந்திலி இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் நேற்றுகாலை முதல் திருப்பத்தூரில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தப்பி ஓடிய சகாதேவனின் சொந்தஊரான சின்னகந்திலியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சகாதேவன் பர்கூரில் இருப்பதாக துணைபோலீஸ்சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசாருடன் பர்கூருக்கு விரைந்துசென்றார். அங்கு சகாதேவனை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடையில் இருந்த சகாதேவனை போலீசார் சுற்றிவளைத்துபிடித்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையின்போது சகாதேவன் கூறியதாவது:–
எனது மகள் புவனேஸ்வரி திருமணமாகி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மற்றொரு மகள் அக்ஷிதா பிளஸ்–2 படித்துவருகிறார். மகன் ரித்திஷ் தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்துவருகிறான். என்னை ஜாமீனில் எடுப்பதாக எனது மனைவி கூறியிருந்தார். ஆனால் ஜாமீனில் எடுக்கவில்லை. எனது மகள்களையும், மகனையும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. ஜாமீனில் எடுக்காததால் சிறையில் இருந்து தப்பி செல்லதிட்டமிட்டேன்.அதன்படி இன்று (நேற்று) அதிகாலை 4.30 மணிக்கு அறையில் இருந்து வெளியேவந்து 6.30 மணிக்கு அங்கு கிடந்த ஒரு வேட்டியை பயன்படுத்தி தப்பினேன். கையில் பணம் இல்லாததால் லாரிமூலம் வந்தேன். பகலில் வீட்டுக்கு சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால், இரவில் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.
அதற்கு முன்பு செலவுக்கு பணம் வாங்குவதற்காக முன்பு வேலைபார்த்த இடமான பர்கூருக்கு சென்றேன். அப்போது போலீசில் மாட்டிக்கொண்டதாக கூறி உள்ளார்.ஆனால் சகாதேவனுக்கு பர்கூரில் ஒரு கள்ளக்காதலி இருப்பதாகவும், அவரை பார்க்க சகாதேவன் அடிக்கடி பர்கூருக்கு சென்றுவந்ததும் தெரியவந்தது. அதன்படி நேற்று அவர் பர்கூரில் உள்ள கள்ளக்காதலியை பார்க்கசென்றபோது போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.