நெல்லையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி நெல்லையில் 2–வது நாளாக நேற்று அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி நெல்லையில் 2–வது நாளாக நேற்று அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் சரிவர இயங்கவில்லை.
காத்திருப்பு போராட்டம்அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்து கழக வரவு–செலவு கணக்குகளை அரசு ஏற்க வேண்டும், ஓய்வு பெறும்போது பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
நெல்லையில் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இரவில் அங்கேயே படுத்து தூங்கினர். 2–வது நாளாக நேற்றும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. பொதுச்செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. துணை தலைவர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் ஆவுடையப்பன், கண்ணன், வேலுச்சாமி, எச்.எம்.எஸ். நிர்வாகிகள் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், உலகநாதன், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் மோகன், பெருமாள், ஜோதி, தே.மு.தி.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், பாபுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெளியூர் பஸ்கள்இதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்துக்கு கீழே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நெல்லையில் இருந்து சென்னை, மதுரை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். நெல்லை புதிய பஸ்நிலையம், சந்திப்பு பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக பயணிகள் அதிகளவில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.
சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.