படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மானியத்துடன் கடன்‘படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ என்ற சுயதொழில் செய்வதற்கான கடனுதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி சேவை, வியாபார தொழிலுக்கு முறையே அதிகப்பட்சமாக ரூ.10 லட்சம் வரை சுயதொழில் செய்ய வங்கிகள் மூலம் மானியத்துடன் கடனுதவி பெறலாம்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது பொது பிரிவினருக்கு 35, சிறப்பு பிரிவினருக்கு 45 வயது என நிர்ணயம் செய்யப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ரேஷன்கார்டு நகல் அல்லது இருப்பிட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நெல்லை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விளிம்பு தொகைமேலும் திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீதமும் விளிம்பு தொகையாக வங்கியில் செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகப்பட்சம் ரூ.1¼ லட்சம் வரை) அரசு மானியமாக வழங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 210 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மானியமான ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு அரசால் செய்யப்பட்டு உள்ளது.
இணையதள முகவரிஇந்த திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். கடன் தொகைக்கு வங்கியினர் ஒப்புதல் அளித்தவுடன், பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/ UYEGP என்ற இணையதள முகவரி வழியாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 0462–2572162, 0462–2572384 என்ற தொலைபேசி எண்களிலும், 9944778924 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.