சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பிளஸ்–2 மாணவர் பலி மேலும் 4 பேர் படுகாயம்
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிளஸ்–2 மாணவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பிளஸ்–2 மாணவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிளஸ்–2 மாணவர்சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிதாசன். இவருக்கு பிரியா (வயது 20) என்ற மகளும், பவித்ரன் (17) என்ற மகனும் உண்டு. பிரியா, சாத்தான்குளத்தில் தையல் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். பவித்ரன், நெல்லை மாவட்டம் இட்டமொழியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று காலையில் பவித்ரன் தன்னுடைய அக்காள் பிரியாவை சாத்தான்குளத்தில் தையல் பயிற்சிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது அவர், தன்னுடைய உறவினரின் 3 வயது குழந்தையையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்பக்கத்து ஊரான வேலாயுதபுரத்தை சேர்ந்தவர்கள் முருகன் மகன் சின்னத்துரை (32), ஆறுமுகம் மகன் சந்திரசேகர் (32). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள தோட்டத்தில் குளித்து விட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வேலாயுதபுரம் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பவித்ரன், பிரியா, சின்னத்துரை, சந்திரசேகர் மற்றும் 3 வயது குழந்தை ஆகிய 5 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் சாவுதலையில் பலத்த காயம் அடைந்த பவித்ரன், சின்னத்துரை ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.