சமூக வலைத்தளங்களில் என்னை தவறாக விமர்சிப்பதா? சங்கரின் மனைவி கவுசல்யா ஆவேசம்
உடுமலை சங்கரின் கொலை வழக்கில் 3 பேரின் விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றும், சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறாக விமர்சிக்கப்பட்டு வருவதாகவும் குமரலிங்கத்தில் சங்கரின் மனைவி கவுசல்யா கூறினார்.
மடத்துக்குளம்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த குமரலிங்கத்தை சேர்ந்த வேலுசாமியின் மகன் சங்கர் (வயது 22). பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த இவர், அதே கல்லூரியில் படித்து வந்த பழனியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13–ந் தேதி உடுமலை பஸ் நிலையம் அருகே சங்கரையும், கவுசல்யாவையும் மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. இதில் சிகிச்சை பலனின்றி சங்கர் இறந்தார். சிகிச்சைக்கு பின்னர் கவுசல்யா வீடு திரும்பினார்.
இந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு திருப்பூர் கோர்ட்டில் தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இது குறித்து கொலையான சங்கரின் மனைவி கவுசல்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நீதியின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தூக்கு தண்டனை குறித்து என்னுடைய கருத்து வேறாக இருந்தாலும், இந்த தீர்ப்பு அவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆணவ படுகொலை, சாதீய கொலை செய்ய நினைப்பவர்கள் இதை நினைத்து பயப்படுவார்கள். ஆகவேதான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
சமூக வலைத்தளங்களில் சாதீய சக்திகளால் என்னை பற்றி அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. எனது கணவரின் தம்பிகளுடன் நான் இருக்கும் புகைப்படங்களை கூட தவறாக பதிவு செய்கிறார்கள்.
சாதி ஒழிப்பு என்பது என் உயிர் இருக்கும் வரை தொடரும். சாதீய கொலைகளுக்கான தனிச்சட்டம் இயற்றும் வரை எங்கள் கள போராட்டம் தொடரும். வரும் காலங்களில் சாதிகளுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் சமத்துவமே என் நோக்கம். எங்கள் சமூகம் கல்வியில் நல்ல நிலைக்கு வந்தாலே சமூக மாற்றம் உண்டாகும் என்பது எனது கருத்து. எனவே கல்விக்கான வழிகாட்டல், சாதீய கொடுமை குறித்த புரிதல் அவசியம். அதற்கான பணிகளில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.