காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு, அரசு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு ஓய்வுபெறும் கடைசி மாத ஊதியத்தின் அடிப்படையில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்குவதைபோல் சதவீத அடிப்படையில் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரத்து 500 கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சங்கத்தின் ஈரோடு மாவட்ட மையம் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் ஏசையன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, செயலாளர் புஸ்பராகு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
போராட்டத்தில் கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.ராஜசேகர், மாவட்ட பொருளாளர் அன்புரோஸ் மற்றும் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம உதவியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.