கடலூரில், தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு: ‘‘சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க பொதுமக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்’’
கடலூரில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்த கவர்னர் பன்வாரிலால் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ரெயில் மூலம் பயணிகளோடு பயணியாக அமர்ந்து விருத்தாசலத்துக்கு வந்தார். அதைத்தொடர்ந்து அவர் விழாவில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.
அதன்பிறகு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவிலில் சாமி தரிசனம் செய்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கிருந்து காரில் கடலூர் சுற்றுலா மாளிகைக்கு இரவு 8 மணி அளவில் வந்தடைந்தார். இரவு அங்கு தங்கி ஓய்வு எடுத்த அவர் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பஸ் நிலையம் செல்லும் சாலையான பாரதிசாலையில் கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக சுற்றுலா மாளிகையில் இருந்து காலை 9.37 மணிக்கு புறப்பட்ட கவர்னர் பாரதிசாலை வழியாக செல்லாமல், செம்மண்டலம், கம்மியம்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெரு வழியாக வண்டிப்பாளையம் சென்றார்.
அங்கு கற்பகவிநாயகர் கோவில் தெருவில் பாலசுப்பிரமணியன் என்பவர் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் இந்த இடத்தை தூய்மையாக வைத்திருங்கள். தினந்தோறும் நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியில் ஈடுபட்டார். கையுறை அணிந்து குப்பைகளை எடுத்து குப்பை தொட்டியில் போட்டார். துடைப்பத்தை கையில் எடுத்து அந்த இடத்தை தூய்மை படுத்தினார்.
அப்போது அங்கிருந்த பெண்ணிடம் சுகாதாரம் தொடர்பான துண்டுபிரசுரத்தை கொடுத்து சத்தமாக படிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த பெண் தனக்கு படிக்க தெரியாது என்று கூறினார். அவருடன் வந்த மற்றொரு பெண் தனக்கு படிக்க தெரியும் என்று, கூறி துண்டுபிரசுரத்தில் எழுதப்பட்டிருந்த சுகாதாரம் தொடர்பான வாசகத்தை சத்தமாக படித்தார்.
அந்த வழியாக சென்ற விவசாயி ஒருவரிடத்திலும் துண்டுபிரசுரத்தை கொடுத்து, அதை சத்தமாக படிக்க சொன்னார். அவரும் அதை படித்தார். இதை கேட்ட கவர்னர், அவர்களிடம் தேவையான துண்டுபிரசுரத்தை வினியோகம் செய்து அனைவருக்கும் கொடுக்குமாறு கூறினார். பின்னர் சிறிது தூரம் நடந்து சென்ற அவர் அங்குள்ள ஒரு வீட்டு முன்பு கிடந்த குப்பைகளை துடைப்பத்தால் சுத்தம் செய்து, அகற்றினார்.
அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் வரும் வழியில் திடீரென அம்பேத்கர் நகருக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறையை பார்வையிட்டார். கழிவறை தரமானதாக கட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டு உரிமையாளரிடமும், அவருடன் இருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணிடமும் கழிவறையை பயன்படுத்த வேண்டும். சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் இந்த கழிவறையை கட்ட எவ்வளவு பணம் செலவழித்தீர்கள் என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு அவர் அரசு தான் கட்டிக்கொடுத்தது என்றார்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம், சுகாதாரம் தொடர்பான துண்டுபிரசுரத்தை கொடுத்து வாசிக்க சொன்னார். அவர் வாசித்ததும் அவரிடத்திலும் துண்டுபிரசுரத்தை கொடுத்து அனைவருக்கும் வழங்குமாறு கூறி வெளியே வந்தார். அப்போது அவருடைய காருக்கு அருகில் திரண்டு நின்ற அப்பகுதி மக்கள், தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவில்லை. வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
அவர்களின் குறைகளை கேட்ட கவர்னர், உங்கள் கலெக்டர் இங்கு தான் இருக்கிறார். அவர் தகுதியான நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். தொடர்ந்து அவர்களிடம் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அங்கிருந்து புறப்பட்டு, வண்டிப்பாளையம் வழியாக போடிச்செட்டி தெரு முனைக்கு சென்றார். அங்கு திடீரென காரை நிறுத்த சொன்ன கவர்னர், மறுபடியும் திரும்பி வண்டிப்பாளையம் வழியாக ரெயில்வே மேம்பாலம், கடலூர்– சிதம்பரம் சாலை, உழவர் சந்தை, அண்ணாபாலம், பாரதிசாலை வழியாக சுற்றுலா மாளிகைக்கு 10.32 மணிக்கு சென்றார்.