31–ந் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் உணவு பொருட்கள் விற்பனை கடைகளுக்கு ‘சீல்’


31–ந் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் உணவு பொருட்கள் விற்பனை கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 16 Dec 2017 3:15 AM IST (Updated: 16 Dec 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் வருகிற 31–ந் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால் உணவுபொருள் விற்பனை கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்,

உணவுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை பதிவு செய்து உரிமம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் உணவுபொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. அதில் 6 ஆயிரம் கடைகள் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் கடைகளாகும்.

மொத்தமுள்ள 21 ஆயிரம் கடைகளில் இதுவரை 5,300 கடைக்காரர்கள் மட்டுமே பதிவு செய்து உரிமம் பெற்றுள்ளனர். இன்னும் 15 ஆயிரத்து 700 கடைகளுக்கு உரிமம் பெறவில்லை. உரிமம் பெறாத கடைக்காரர்கள் உரிமம் பெறுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதிலும் 15 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வேலூரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் நேற்று முதல் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்டேசன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சி, கவுரிசுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகளிடத்தில் விண்ணப்பங்கள் பெற்றனர்.

இதில் வணிகர்கள் சங்க தலைவர் ஞானவேலு தலைமையில் வியாபாரிகள் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர். விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட நியமன அலுவலர் வெங்கேடசன் வியாபாரிகளிடம் கூறியதாவது:–

ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்பவர்கள் ரூ.100 செலுத்தியும், ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தியும் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளவேண்டும். தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்பவர்கள், சிக்கன் பக்கோடா விற்பவர்கள் என அனைத்து கடையினரும் வருகிற 31–ந் தேதிக்குள் உரிமம் பெறவேண்டும்.

அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 1–ந் தேதி முதல் ஆய்வு செய்து உரிமம் பெறாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். அதோடு உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story