மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக சரக்கு போக்குவரத்து தொடங்கியது
மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக சரக்கு போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதன் மூலம் துபாய் விமானத்தில் மதுரை மல்லிகை சென்றது.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்குகளை (பொருட்களை) அனுப்பும் சரக்கு போக்குவரத்து முனையம் நேற்று முதல் செயல்பாட்டு வந்தது. இதன் தொடக்க விழா மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனைய வளாகத்தில் நடந்தது. தமிழக சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் தலைமை தாங்கினார். மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ், மதுரை சுங்கத்துறை கமிஷனர் சரவணக்குமார், இணை கமிஷனர் பாண்டியராஜா, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழக சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்பும் நடைமுறையை தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு சரக்குகளை நேரடியாக அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை வியாபாரிகள் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக பேசப்படும் தென் தமிழகம், இனி பொருளாதார நிலையில் பேசப்படும். இன்று(நேற்று) மதியம் மதுரையில் இருந்து மல்லிகை பூ, ரோஜா, தாமரை பூ ஆகியவை துபாய்க்கு செல்கிறது. தொடர்ந்து காய்கறிகள், பழங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். மதுரை விமான நிலையத்தின் ஓடுதளம் விரிவாக்கம் உள்ளிட்ட சில குறைபாடுகள் உள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் பேசும் போது, மதுரை விமான நிலையத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது 40 சதவீதம் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. மதுரை விமான நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் வகையில் கட்டிடங்கள் விரிவுப்படுத்தப்படும். அதில் அவர்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கி தரப்படும். இங்கு விமான ஓடு பாதையை விரிவுப்படுத்துவற்கான நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. அதற்கான நிலத்தை கையகப்படுத்தி தரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அந்த பணி விரைவில் முடிய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 3 ஆண்டுகளில் மதுரை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்லும் என்றார்.
மதுரை சுங்கத்துறை கமிஷனர் சரவணக்குமார் பேசும்போது, மதுரை விமான நிலையத்தில் 2013–ம் ஆண்டு சரக்கு போக்குவரத்து முனையம் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது தான் வெளிநாடுகளுக்கு நேரடியாக சரக்குகளை அனுப்பும் நடைமுறை வந்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்திற்கு இந்த பிரிவை கொண்டு வந்துள்ளோம். இனி மதுரையில் இருந்து சிங்கப்பூர், துபாய் இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக சரக்குகளை அனுப்ப முடியும் என்றார்.