பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
அய்யம்பேட்டையில் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
அய்யம்பேட்டை,
பாபநாசம் தாலுகாவில் விவசாயிகளுக்கு 2016–17 ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், உடனே வழங்கக்கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் முத்து உத்திராபதி, ஒன்றிய செயலாளர் குணசேகரன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் தர்மராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் செல்லதுரை மற்றும் அய்யம்பேட்டை, சூலமங்கலம், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, கணபதி அக்ரஹாரம், வையச்சேரி, உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த மாத இறுதிக்குள் காப்பீடு பதிவு செய்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு விவசாயிகள் கலந்து சென்றனர். இதனால் தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.