தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகங்கள் முன்பு 48 மணிநேர காத்திருப்பு போராட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இரவு நேரத்திலும் இந்த போராட்டம் நீடித்தது. விடிய, விடிய பனியையும் பொருட்படுத்தாமல் பந்தலில் ஊழியர்கள் படுத்திருந்தனர். 2–வது நாளாக தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யூ. கோட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். போராட்டத்தை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் மாரிமுத்து தொடங்கி வைத்தார்.
இதில் சி.ஐ.டி.யூ. மாநில துணைத் தலைவர் கண்ணன், துணைச் செயலாளர்கள் சரவணன், அசோகன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைச் செயலாளர் தமிழ்மணி, செந்தில், வியாகுலசாமி ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில், தமிழக அரசின் இதரத்துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். 13–வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் பணத்தை வைத்து கழகங்களை நடத்தக்கூடாது. ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்கள், ஓய்வூதிய நிலுவைத்தொகைகளை உடனே வழங்க வேண்டும். 1–4–2013–க்குள் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வைப்புநிதி, ஓய்வூதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சின்னையன், ராஜேந்திரன், மதியழகன், வைத்தியநாதன், நீலமேகம், சண்முகசுந்தரம், ராஜகோபால், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுவோம் எனவும் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.