கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் மரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் மரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மருத்துவர் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது54). கூலிதொழிலாளி. இவருக்கு இடம் தொடர்பான வழக்கு கும்பகோணம் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவரது இடத்தை கவுதமி மற்றும் கண்ணன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் வீடுகட்டபோவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கலியமூர்த்தி கடந்த 11–ந் தேதி திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அவர் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக கலியமூர்த்தி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி தேன்மொழி கலியமூர்த்தியை பத்திரமாக மீட்க தீயணைப்பு வீரர்களை கேட்டுகொண்டார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ½ மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு கலியமூர்த்தியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட கலியமூர்த்தி மீது கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.