முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது


முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 Dec 2017 3:15 AM IST (Updated: 17 Dec 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மொபைல் ஆப் மூலம் கள பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மசினகுடி,

தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு, முண்டந்துறை ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகம் சிறந்த புலிகள் காப்பகமாக திகழ்ந்து வருகிறது. 59 புலிகளும், 89 சிறுத்தைகளும் உள்ள இந்த புலிகள் காப்பகத்தில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை புலிகளின் எண்ணிக்கை, அவற்றிற்கான உணவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கணக்கெடுப்பு பணி நடத்தபட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான முதற்கட்ட கணக்கெடுப்பு நடந்து முடிந்த நிலையில் 2–ம் கட்ட கணக்கெடுப்பு நாளை(திங்கட்கிழமை) காலை தொடங்குகிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பிற்காக கள பணியில் ஈடுபடுபவர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று காலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள உள்அரங்கில் தொடங்கியது. இதனை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி, துணை கள இயக்குனர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பயிற்சி முகாமில் முதன் முறையாக மொபைல் ஆப் மூலம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் 36 குழுக்களை சேர்ந்த 180 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தன்னார்வலர்கள் தங்களிடம் உள்ள மொபைல் போனை பயன்படுத்தி வனப்பகுதிகுள் செல்லும் போதும் புலிகள் உள்ளிட்ட ஊன் உண்ணிகளை பார்க்கும் போதும் எவ்வாறு தகவல்களை பதிவு செய்வது, அதே போல டேட்டா சீட் முறையில் எவ்வாறு கணக்கெடுப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

புலிகளை துல்லியமாக கணக்கெடுக்கவே தமிழகத்தில் முதல் முறையாக இந்த மொபைல் ஆப் முறை பயன்படுத்தபடுகிறது. இன்றைய பயிற்சி முடிந்தவுடன் 36 குழுக்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கபடுகின்றனர்.

ஒவ்வொரு குழுவினரும் நாளை(திங்கட்கிழமை) காலை முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு வனப்பகுதியினுள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனத்துறை ஊழியர், வேட்டை தடுப்பு காவலர், தன்னார்வலர், பயிற்சி வனச்சரகர் என 5 பேர் இடம்பெறுவார்கள். இந்த கணக்கெடுப்பிற்கான பயிற்சியை முதுமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் சுந்தர் ராஜன் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கவுரவ வனபாதுகாவலர் மோகன் ராஜ் ஆகியோர் அளித்து வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர்கள் ஞானதாஸ், சுரேஷ், சிவக்குமார், ராஜேந்திரன், மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story