ஆனைமலை அருகே தொடர் அட்டகாசம்: காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்


ஆனைமலை அருகே தொடர் அட்டகாசம்: காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:00 AM IST (Updated: 17 Dec 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். இந்த யானை மதுக்கரையில் இருந்து பிடித்து வந்து டாப்சிலிப்பில் விடப்பட்டதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆனைமலை,

பொள்ளாச்சி வனச்சரகத்தில் யானைகள் உள்பட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியையொட்டி சேத்துமடை, சரளைப்பதி, நரிக்கல்பதி, தம்மம்பதி, செமனாம்பதி உள்ளிட்ட மலையடிவார கிராமங்கள் உள்ளன. இந்த இடங்களில் விவசாயிகள், மலைவாழ் மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள தோட்டங்களில் தென்னை, வாழை, பாக்கு மற்றும் காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. கடந்த 3 மாதமாக காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை வேருடன் சாய்த்துவருகின்றன.

இதற்கிடையில் கடந்த மாதம் சேத்துமடை பகுதியை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி என்பவர் யானை துரத்தியதால் உயிரிழந்தார். இதையடுத்து வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு டாப்சிலிப்பில் இருந்து கலீம், வெங்கடேஷ், சுயம்பு, மாரியப்பன் ஆகிய 4 கும்கி யானைகள் சேத்துமடைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. கும்கி யானைகள் காட்டு யானைகள் வழக்கமாக ஊருக்குள் நுழையும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும்ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர் சுப்பையா மேற்பார்வையில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் 15 பேர் வீதம் 30 பேர் கொண்ட 2 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். வழக்கமாக யானை வரும் பகுதியில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் காட்டு யானைகள் வேறு வழியாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று அதிகாலை 2 மணிக்கு சேத்துமடை பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை காமாட்சியம்மன் கோவில் வீதியில் சில வீடுகளை சேதப்படுத்தியது. மேலும் ஒரு வீட்டின் கேட்டை பிடுங்கி வீசியது. பின்னர் காளியாபுரம் சென்ற யானை, குடிசையில் தூங்கி கொண்டிருந்த நடராஜ் என்பவரது மனைவி அருக்காணி (வயது 60) என்பவரை துதிக்கையால் தள்ளியது.

இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணிக்கு பொன்னாலம்மன்துறை வண்டிமாகாளியம்மன் கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற 10–க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காட்டு யானை பொள்ளாச்சி வனப்பகுதியில் பச்சை தண்ணீர் பீட் என்ற பகுதிக்குள் நுழைந்தது. காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருக்காணியை வனச்சரகர் காசிலிங்கம், வனவர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

சேத்துமடை பகுதியில் காட்டு யானை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. யானை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் இருந்து கலீம் உள்பட 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அடம்பிடித்து வருகிறது. இதனால் டாப்சிலிப், வால்பாறையில் இருந்து கூடுதலாக 2 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. வழக்கமாக இதே பகுதியில் சுற்றி திரியும் யானையாக இருந்தால் விரட்டினால் சென்று விடும்.

ஆனால் இந்த யானை விரட்டினால் வழி தெரியாமல், திரும்பி வந்த இடத்திற்கே வருகிறது. கோவை மதுக்கரை பகுதியில் இருந்து கடந்த ஜூன் மாதம் ஒரு ஆண் யானையை பிடித்து வந்து, டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஒரு வேளை அந்த யானை சென்ற பாதையின் மோப்பசக்தியை வைத்து திரும்பி வந்து உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக வனப்பகுதியில் விடப்பட்ட யானையின் புகைப்படத்தை வைத்து, இந்த யானையுடன் ஒத்து போகிறதா? என்று பார்த்து வருகிறோம். இன்னும் 2 நாட்கள் வரை யானை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்யப்படும். அதன்பிறகும் யானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை என்றால் மயக்க ஊசி போட்டு பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story