சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் சபாநாயகருக்கு, அன்பழகன் எம்.எல்.ஏ. கடிதம்
புதுவை மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக முதல்–அமைச்சர், அமைச்சர்கள் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன், சபாநாயகர் அலுவலகத்தில் அளித்துள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக முதல்–அமைச்சர், அமைச்சர்கள் அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி நிதி நெருக்கடி குறித்து விளக்கம் அளிப்பது அரசின் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.
புதுவை மாநிலத்தில் ஏழை, எளிய மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மாநிலத்தில் மாதத்திற்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக முதல்–அமைச்சர் கூறுகிறார். அரசு ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிடவும், மாநிலத்தின் நிதிநிலை சம்பந்தமான உண்மை நிலையை அறிந்திடவும் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்–அமைச்சர் கருத்தை சட்டமன்றத்தில் அறியவும், மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை பெறுவதற்கு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில் நிதிநிலைமை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.