பாகூர் ஏரியில் மூழ்கிய மீனவர் 2 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்பு


பாகூர் ஏரியில் மூழ்கிய மீனவர் 2 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் ஏரியில் மூழ்கிய மீனவரின் உடல் 2 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்கப்பட்டது.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த அரங்கனூர் நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வைத்தியநாதன் (வயது 50), கந்தன் (40), சேட்டு (36) ஆகியோர் கடந்த 14-ந்தேதி நள்ளிரவில் பாகூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றனர். ஏரியில் சிறிது தூரம் சென்றபோது ஆழம் அதிகமாக இருந்ததால் அவர்கள் கரை திரும்பினார்கள். கந்தன், சேட்டு ஆகியோர் கரை ஏறினார்கள். ஆனால் வைத்தியநாதன் கரை திரும்பவில்லை. அவரை தேடிப்பார்த்ததில் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் இதுகுறித்து பாகூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார், உள்ளூர் மீனவர்கள், தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து வைத்தியநாதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை.

2-வது நாளாக நேற்று காலையில் மீண்டும் வைத்தியநாதனை தேடும் பணியில் போலீசார் மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு வைத்தியநாதன் பிணமாக அவர்கள் மீட்டனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story