வேன் கவிழ்ந்து 1-ம் வகுப்பு மாணவி பலி மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி


வேன் கவிழ்ந்து 1-ம் வகுப்பு மாணவி பலி மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 17 Dec 2017 4:45 AM IST (Updated: 17 Dec 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே பள்ளிக்கு சென்றபோது வேன் கவிழ்ந்ததில் 1-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு உதவிபெறும் அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் மெட்ரிக் பள்ளியும் உள்ளது. இந்த மெட்ரிக் பள்ளியில் முசிறி மட்டுமின்றி பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில் தண்டலைப்புத்தூர், நெய்வேலி, புத்தூர், வேளகாநத்தம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல பெற்றோர்கள் தாங்களாகவே வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

வழக்கம்போல நேற்று காலை 15 மாணவிகளை ஏற்றிக் கொண்டு வேளகாநத்தம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் நெய்வேலி பகுதியை சேர்ந்த காமராஜ் மகள் பிரதீபா (வயது 11), சரவணன் மகள் கோகுலதர்ஷினி (11), பூபதி மகள் பூங்கவி (11), வேளகாநத்தம் முருகேசன் மகள் தேஜா (6) ஆகிய 4 மாணவிகள், டிரைவர் சிவக்குமார் (35) என 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் 5 பேரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் தேஜாவும், டிரைவர் சிவக்குமாரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேஜா பரிதாபமாக இறந்தாள். இவர், அமலா மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story