கிருஷ்ணகிரியில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில், பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் வரவேற்றார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில துணை தலைவர் மேகநாதன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், இளம்பெண்கள் இயக்க மாநில செயலாளர் தமிழ்செல்வி வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.த.அருள்மொழி கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சி நிர்வாகத்தை கண்டு கொள்ளவில்லை. பக்கத்து மாநிலமான கேரளா முதல்-மந்திரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு தொகையையும், உரிய நிவாரணமும் வழங்கி வருகிறார். அதை பார்த்தாவது தமிழக அரசு மீட்பு பணிகளில் ஈடுபட முன் வர வேண்டும். ஆனால் இவர்களோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களை கவர்னரும் நல்வழிபடுத்த தவறி வருகிறார்.

எனவே தான் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அதை அரசுகள் வழங்க வேண்டும். ஒகி புயலால் எத்தனை மீனவர்கள் இறந்துள்ளனர். எத்தனை மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையின பிரிவு மாவட்ட செயலாளர் ஜார்ஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பிரபு மற்றும் வெங்கடேஷ் செட்டியார், பழனிவேல், மஞ்சுநாத், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார். 

Next Story