‘குஜராத் சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பை ஏற்க முடியாது’


‘குஜராத் சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பை ஏற்க முடியாது’
x
தினத்தந்தி 17 Dec 2017 4:03 AM IST (Updated: 17 Dec 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

‘‘குஜராத் சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பை ஏற்க முடியாது’’ என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மும்பை,

குஜராத் சட்டசபைக்கு முறையே கடந்த 9 மற்றும் 14–ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நாளை (18–ந் தேதி) தேர்தல் முடிவு வெளியாகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், பாரதீய ஜனதா பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், தேர்தல் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்த சூழலில், இந்த கருத்து கணிப்பு முடிவை பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா திட்டவட்டமாக மறுத்தது. இதுபற்றி அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மும்பை பாந்திராவில் உள்ள தன்னுடைய ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

குஜராத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கும், கருத்து கணிப்புக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆகையால், பா.ஜனதா பெரும்பான்மை பெறும் என்ற கணிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். திங்கட்கிழமை இறுதிமுடிவு தெரிந்துவிடும். அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசிடம் பொதுமக்கள் நிறைய எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பயிர்க்கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்ட எதற்கும் இந்த அரசால் தீர்வு காண முடியவில்லை. ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தாலும், சிவசேனா தன் வண்ணத்தை மாற்றிக்கொள்ளாது. பொதுமக்களின் பிரச்சினைகளில் எங்களது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் எங்களுக்கு கற்று தர வேண்டாம்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.


Next Story