ஊழல்தடுப்பு படையில் 56 புகார்கள் கொடுத்தும் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்?
ஊழல் தடுப்பு படையில் 56 புகார்கள் கொடுத்தும் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்? என்று எடியூரப்பா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நேற்று கொப்பலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் சிறைக்கு சென்று வந்தவன் என்று முதல்–மந்திரி சித்தராமையா அடிக்கடி கூறி வருகிறார். என் மீது 42 வழக்குகள் இருப்பதாகவும் அவர் சொல்கிறார். நான் லஞ்சம் வாங்கியதாக சித்தராமையா பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நான் லஞ்சம் வாங்கியதை சித்தராமையா பார்த்துள்ளாரா?. என் மீது தவறான கருத்துகளை கூறி மக்களிடம் சித்தராமையா பரப்பி வருகிறார். என் மீது போடப்பட்ட வழக்குகள் எதுவும் நிரூபணம் ஆகவில்லை. ஐகோர்ட்டு, சி.பி.ஐ. கோர்ட்டு நான் நிரபராதி என்று கூறியுள்ளது.அப்படி இருக்கும் போது நான் சிறைக்கு சென்றதாக சித்தராமையா சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கர்நாடக வரலாற்றில் சித்தராமையாவை போல கீழ்த்தரமான முதல்–மந்திரியை மக்கள் பார்த்ததில்லை. அவர் மீது ஊழல் தடுப்பு படையில் 56 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சித்தராமையா மீது மட்டும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய தயங்குவது ஏன்?.
முதல்–மந்திரி சித்தராமையா, அவரது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளவர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள். பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் சித்தராமையா சிறைக்கு செல்வது உறுதி. அவருடன் ஊழலில் ஈடுபட்ட மந்திரிகளும் சிறைக்கு செல்வார்கள். நான் தொடங்கியுள்ள மாற்றத்திற்கான யாத்திரை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான் செல்லும் இடத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.மாற்றத்திற்கான யாத்திரைக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்திருப்பதால், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சித்தராமையா கூறுகிறார். மக்கள் மனதை திசை திருப்ப சித்தராமையா முயற்சிக்கிறார். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story