நிலுவை தொகை செலுத்தினால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அபராதம் தள்ளுபடி


நிலுவை தொகை செலுத்தினால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அபராதம் தள்ளுபடி
x
தினத்தந்தி 17 Dec 2017 5:35 AM IST (Updated: 17 Dec 2017 5:35 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிலுவை தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அபராதம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ‘அன்லாக்’ முறையிலான ஒளிப்பரப்புக்கு கேபிள் டி.வி. கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்த தவறிய உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆபரேட்டர்கள் அபராதத்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் செலுத்த வேண்டிய அசல் சந்தா கட்டணத்தை முழுமையாக ஒரே தவணையில் செலுத்தி விடுவதாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அசல் நிலுவைத்தொகை முழுவதையும் ஒரே தவணையில் திருப்பி செலுத்தும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனைவருக்கும் 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிய உள்ள அபராதத்தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

நிலுவையில் உள்ள அசல் சந்தா தொகை முழுவதையும் ஒரே தவணையில் ‘ஆன்லைன்’ மூலம் வருகிற அடுத்த மாதம் (ஜனவரி) 5–ந் தேதிக்குள் ஒரே தவணையாக செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அசல் தொகை மற்றும் அபராதத்தொகை விவரம் ஆபரேட்டர்களுக்கு தெரிவிக்கப்படும்.

நிலுவையில் உள்ள அசல் சந்தா தொகையை ஒரே தவணையில் செலுத்திய உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அபராதத்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்ற சான்று ‘ஆன்லைன்’ தபால் மூலம் தெரிவிக்கப்படும். இந்த சலுகை ஒரே ஒருமுறை தான் வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பயன்படுத்தி அசல் நிலுவை தொகையை செலுத்தி அபராதத்தொகையில் இருந்து விலக்கு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story