குழந்தைகளை ஆற்றில் வீசிகொலை செய்த தாய்க்கு இரட்டை ஆயுள் கோர்ட்டு தீர்ப்பு


குழந்தைகளை ஆற்றில் வீசிகொலை செய்த தாய்க்கு இரட்டை ஆயுள் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Dec 2017 3:45 AM IST (Updated: 18 Dec 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் குழந்தைகளை வீசி கொலை செய்த தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பரவூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

எர்ணாகுளம்,

எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கொச்சுதிரேசியா (வயது 41). இவர்களுக்கு ஷெரி (7) என்ற மகளும், ஷோன் (4) என்ற மகனும் இருந்தனர். கடந்த 2015–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4–ந் தேதி கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கொச்சுதிரேசியா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு அந்த பகுதியில் ஆற்றுக்கு சென்றார். பின்னர் 2 குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசினார். பின்னர் அவரும் ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இதில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்தனர். கொச்சுதிரேசியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது அவரை சோதனை செய்த டாக்டர்கள், கொச்சுதிரேசியா ஆற்றில் குதித்ததில் அவருடைய உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் தண்ணீருக்குள் நீண்ட நேரம் கிடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என்றும் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கொச்சுதிரேசியா தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்தது போல் நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பரவூர், கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரணை செய்த கோர்ட்டு குழந்தையை கொன்று தற்கொலை செய்தது போல் நாடகமாடிய கொச்சுதிரேசியம்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.


Next Story