திண்டுக்கல்லில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


திண்டுக்கல்லில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Dec 2017 10:45 PM GMT (Updated: 17 Dec 2017 9:31 PM GMT)

திண்டுக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மோகன்தாஸ், அரசு அலுவலர் ஒன்றிய மாநில இணைச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6–வது ஊதியக்குழுவினால் இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், உயர்நிலை–மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தலைமை செயலக உதவிப்பிரிவு அலுவலர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையாக ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். 6–வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை போல, தமிழக அரசு அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் அமல்ராஜ் நன்றி கூறினார்.


Next Story