அம்மிக்கல்லை தலையில் போட்டு காதல் மனைவி கொலை போலீசில் வாலிபர் சரண்


அம்மிக்கல்லை தலையில் போட்டு காதல் மனைவி கொலை போலீசில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 18 Dec 2017 4:45 AM IST (Updated: 18 Dec 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு காதல் மனைவியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

ஜீயபுரம்,

திருச்சி அருகே உள்ள குழுமணி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மகன் சோழன் (வயது 21). டிப்ளமோ படித்துள்ள இவர் சரியான வேலை கிடைக்காததால் சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள உப்பாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த மாதுவின் மகள் சுகன்யாவிற்கும் (20) முகநூல்(பேஸ்புக்) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. அவர்களுடைய காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சோழனும், சுகன்யாவும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் அப்பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தினர். சில மாதங்கள் கழித்து அவர்கள் குழுமணிக்கு வந்து, சோழனின் பெற்றோர் வீட்டின் அருகே உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்தனர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யா பிரசவத்திற்காக தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வருண் என்று பெயரிட்டனர். பின்னர் சோழன் அங்கு சென்று சுகன்யாவை குழந்தையுடன் குழுமணிக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சுகன்யா வர மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுகன்யாவின் பெற்றோர் ஒரு புகார் அளித்தனர். அதில், சுகன்யாவை, குழுமணிக்கு வருமாறு சோழன் அடிக்கடி தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டிருந்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சோழனையும், சுகன்யாவையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

இதையடுத்து மாலையில் அவர்கள் குழுமணியில் உள்ள தங்களுடைய வீட்டிற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டில் படுத்து தூங்கினர். தொட்டிலில் குழந்தை தூங்கியது. நள்ளிரவில் கண்விழித்த சோழன் ஆத்திரத்தில், அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த சுகன்யாவின் தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுகன்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் தொட்டிலில் கிடந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு, சோழனின் பெற்றோர் அங்கு சென்றனர். அப்போது வீட்டின் வெளியே சோழன் அமர்ந்திருந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சுகன்யா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சோழன் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சோழனை கைது செய்தனர்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சுகன்யாவிற்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் பொன்ராமர் மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story