நகையை விற்று பணம் வாங்கி தருவதாக கூறி மாயமான தஷ்வந்தின் நண்பர் கைது
நகையை விற்று பணம் வாங்கி தருவதாக கூறி நகையுடன் மாயமான தஷ்வந்தின் நண்பர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினியை கற்பழித்து கொன்ற வழக்கில் அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தனது தாய் சரளாவை கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகையுடன் தலைமறைவானார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாயை கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளுடன் தப்பிச்சென்ற தஷ்வந்த், அந்த நகையை விற்று பணம் வாங்கி தரும்படி அவருடைய நண்பரான மணிகண்டன் என்பவரிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அந்த நகைகளோடு அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் நேற்று கைது செய்தனர். தஷ்வந்திடம் இருந்து வாங்கிச் சென்ற நகையை ஒரு அடகு கடையில் வைத்து இருந்தார். அந்த நகைகளை போலீசார் மீட்டனர்.
கைதான மணிகண்டன், பாடியில் உள்ள ஒரு நகை கடையில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்தார். அப்போது அங்கு நடந்த முறைகேட்டில் மணிகண்டனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அப்போது சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தஷ்வந்துக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கத்தின் பேரிலேயே தாயை கொலை செய்து விட்டு எடுத்து வந்த நகையை விற்று பணம் வாங்கி தரும்படி மணிகண்டனிடம் தஷ்வந்த் நம்பிக்கையோடு கொடுத்து உள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த மணிகண்டன், நகை விற்று பணம் வாங்கி தருவதாக கூறி விட்டு நகையுடன் தலைமறைவாகி விட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான மணிகண்டனிடம் குன்றத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.