புது மாப்பிள்ளையை வெட்டிய 4 பேர் கைது


புது மாப்பிள்ளையை வெட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2017 4:42 AM IST (Updated: 18 Dec 2017 4:42 AM IST)
t-max-icont-min-icon

புதுமாப்பிள்ளையை வெட்டியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை ராமலிங்கபுரம் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 32). புதுமாப்பிள்ளையான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீடு அருகே நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. இதனால் அவர்களிடம் இருந்து மகாலிங்கம் தப்பி ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி வெட்டியது.

பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றதால் அவர் வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வீட்டு முன்பு மோட்டார்சைக்கிள் விடும் விவகாரம் தொடர்பாக மகாலிங்கம் குடும்பத்துக்கும், பக்கத்து வீட்டுக்காரரான ஆறுமுகம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக ஆறுமுகத்தின் தூண்டுதலின்பேரில் முதலியார்பேட்டையை சேர்ந்த அருள், நைனார்மண்டபம் ஜனா (24), பொம்மையர்பாளையம் ராஜேஷ் (24), கருவடிக்குப்பம் தங்கபாண்டி உள்பட 5 பேர் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜன், தமிழரசன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஒகேனக்கலில் பதுங்கி இருந்த அருள், ஜனா ஆகியோரையும் புதுவையில் இருந்த ராஜேஷ், தங்கபாண்டி ஆகியோரையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story