தடைசெய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் நாட்டுப்படகு மீனவர்கள் மனு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க கோரி நாட்டுப்படகு மீனவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். பரமக்குடி அருகே தெய்வேந்திரநல்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் விஜயராகவன் தலைமையில் ஏராளமான விவசாயிகள், தங்கள் பகுதியில் 60 பேர் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளோம். பயிர் காப்பீடு செய்துள்ள எங்களுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
வேதாளை பகுதி பொதுமக்கள் மற்றும் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பினர் தங்கள் பகுதியில் மரைக்காயர்பட்டினம் அருகில் புதிதாக இறால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பண்ணை அமைந்தால் எங்களின் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக அந்த பகுதியில் இறால் பண்ணை அமைப்பதை தடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். கடலாடி தாலுகா மேலக்கிடாரம் ஊராட்சி திருவரங்கை, காவாகுளம் பகுதி கிராம மக்கள் தங்கள் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்கப்பட உள்ளதால் உடனடியாக தடுத்து நிறுத்தி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு சங்க ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் திரளாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை என 5 மாவட்ட மீனவர்களும் வாரத்தில் 4 நாட்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கவும், 3 நாட்கள் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கவும் முடிவு செய்து முறையாக மீன்பிடித்து வந்தனர். ஆனால், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் 6 நாட்களும் விதிகளை மீறி மீன்பிடிக்க செல்வதோடு, நாட்டுப்படகு மீனவர்கள் நங்கூரம் பாய்ச்சி உள்ள பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கின்றனர்.
மேலும், தடைசெய்யப்பட்ட ரெட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன் ஆதாரங்கள் அழிந்து வருகின்றன. எனவே, மீன்பிடி சட்ட விதிமுறைகளின்படி முறைவைத்து மீன்பிடிக்க வைக்கவும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.